
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருடம் முழுவதும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கோடை விழா மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இங்குள்ள நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், தூண்பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, பிரையண்ட் பார்க் ஆகியவை சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்லும் முக்கிய இடங்களாக உள்ளது.
கொடைக்கானலில் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கடும் குளிர் நிலவி வரும்.
அதன்படி இந்த வருடமும் ஜனவரியில் கடும் குளிர் மற்றும் உறை பனி சீசன் காணப்பட்டது.
இருந்தபோதும் இந்தச் சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னரும் கடும் குளிர் நிலவி வருகிறது.
உறை பனி இல்லாமல் நீர் பனி எனப்படும் சீசன் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.
பகல் பொழுதில் மேக மூட்டமும், பனிப்பொழிவும் நிலவுவதோடு மாலையிலேயே கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது.
கொடைக்கானலில் இ-பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தியும் கோடை காலத்தில் கூட்டம் சமாளிக்க முடியாமல் இருந்தது.
ஆனால் இந்தக் குளிர் சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.
பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடும் குளிர் காரணமாகக் கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
