
விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் வார நாட்களில் 136 பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை அதிகரிக்கவும், டீசல் செலவைக் குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல பேருந்து சேவைகளை நிறுத்த தவெக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் வார நாட்களில் 136 பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டால் கிராமப்புற மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் அன்றாடப் பயணிகளை அதிகளவில் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அரசுப் போக்குவரத்து என்பது வெறும் லாப-நஷ்டக் கணக்கின் அடிப்படையில் செயல்படும் வணிகத் துறை அல்ல என்றும், அது பொதுமக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றும் சேவைத் துறை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
‘மாற்றத்திற்கான ஆட்சி’ எனக் கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், ஏழை மற்றும் எளிய மக்களை பாதிக்கும் வகையில் பேருந்து சேவைகள் குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைக்கப்பட்ட அனைத்து பேருந்து சேவைகளையும் உடனடியாக மீண்டும் இயக்க வேண்டும் என்றும், மேலும் பேருந்து சேவைகளைக் குறைக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.



