திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
தில்லி உச்சநீதிமன்றத்தில் கடந்த 20 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளில் மட்டும் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விஜய், தில்லி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதினால், தமிழகத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் இருவரும் இன்று பணியில் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், நாளை உச்சநீதிமன்றம் விடுமுறை என்பதால் நாளை கட்டாயம் தீபத்துாணில் தீபம் ஏற்றியே தீர வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, மற்றும் அதன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


