BISLERI தண்ணீரால் CANCER? FSSAI ஆய்வில் அதிர்ச்சி.. எச்சரிக்கையா இருங்க மக்களே.!

உங்களோட டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கான்னு கேட்டா அது வேடிக்கையாத் தெரியும்… அதுவே நீங்க குடிக்கிற தண்ணீல கேன்சர் செல் இருக்குன்னா அதிர்ச்சியாத்தானே இருக்கும்… பிஸ்லெரி வாட்டர் குடிக்கிறவங்களுக்கு அப்படி ஒரு அதிர்ச்சிய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கொடுத்துருக்கிறது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

கடந்த ஞாயிற்றுக்கிழமை FSSAI எனக் குறிப்பிடக் கூடிய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட  ஒரு பதிவு, பாட்டில் வாட்டர் பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரபலமான பிஸ்லெரி வாட்டர் பாட்டில் குடிநீர் பாதுகாப்பற்றது என்பதுதான் அது.
பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்தில் இருந்து பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் மாதிரி சேகரிக்கப்பட்டு அதனை FSSAI ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.அப்போது அதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக புரோமேட் (Bromate) வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புரோமேட் வேதிப்பொருள் மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் கொண்டதாக சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) வகைப்படுத்தியுள்ளது.இந்த நிலையில், பிஸ்லெரி நிறுவனத்தின் மேல்முறையீட்டின் அடிப்படையில், மீண்டும் குடிநீர் மாதிரி,  மேல் ஆய்வுக்காக,  பரிந்துரை உணவு ஆய்வகத்துக்கு (Referral Food Laboratory) அனுப்பப்பட்டது.
அங்கும் ஆய்வு செய்ததில், பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பது கண்டறியப்பட்டதால்  உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ன் கீழ் அந்தக் குடிநீர் பாதுகாப்பற்றது என  இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,  உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிஸ்லெரி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அனுமதி அளித்துள்ளது. ஆனால், தங்கள் பாட்டில் குடிநீர் குடிப்பதற்கு பாதுகாப்பானதுதான் என பிஸ்லெரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
2025 செப்டம்பர் மாதம் கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையில் ஒரு குறிப்பிட்ட தொகுதி குடிநீர் மாதிரியில் புரோமேட் அளவு அதிகமாக இருந்தது பரிசோதனையில் பதிவானதாகவும்,
 ஆனால், மறுபரிசோதனையின் முடிவில் புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்தது உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தில் 90க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகளும் 10 கட்ட சுத்திகரிப்பு நிலையை பின்பற்றுவதாகவும் விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 2025 நவம்பர் 22ஆம் தேதி பிஸ்லேரி நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குடிநீர் மாதிரி மறுபரிசோதனைக்காக பரிந்துரை ஆய்வகத்துக்கு (Referral Laboratory) அனுப்பப்பட்டது. அந்த ஆய்வகத்தின் பரிசோதனையில், புரோமேட்டின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பது தெரியவந்தது.
அதேநேரத்தில், அந்த மாதிரியில் பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பதாக ஆய்வகம் தனியாகக் குறிப்பிட்டது.இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளுக்கும் இடையே வேறுபாடு இருந்ததால், இதுகுறித்து கூடுதல் விளக்கம் தேவைப்படுவதாக பிஸ்லேரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, FSSAI அங்கீகாரம் பெற்ற மற்றொரு ஆய்வகத்தில் அதே குடிநீர் மாதிரியை பிஸ்லேரி நிறுவனம் சுயமாகப் பரிசோதனை செய்தது.அதில், புரோமேட்டின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சுயாதீன ஆய்வு முடிவுகளை, 2026 பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரப்பூர்வ கடிதத்துடன் FSSAI-யின் மேற்கு மண்டல அலுவலகத்தில் நிறுவனம் சமர்ப்பித்தது.
அதன்பிறகு FSSAI தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றும், இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தாங்கள் கருதியதாகவும் பிஸ்லேரி தெரிவித்துள்ளது.மேலும், இதுவரை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எந்த நோட்டீஸும் தங்களுக்கு வரவில்லை என்றும், FSSAI இணையதளத்திலும் செய்திகளில் குறிப்பிடப்படும் நோட்டீஸைக் கண்டறிய முடியவில்லை என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை முறையாகச் சுத்திகரித்துப் பருகுவதைவிட, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் குடிப்பதுதான் இந்தச் சிக்கல்களுக்கு காரணம்.வெயிலில் நீண்ட நேரம் வைக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், தரமற்ற பாட்டில்கள், முறையற்ற சேமிப்பு ஆகியவற்றால் தண்ணீரின் தரம் பாதிக்கப்படலாம். சில சூழல்களில் பிளாஸ்டிக்கிலிருந்து நுண்ணிய துகள்களும் தண்ணீரில் கலக்கக்கூடும்.
அவற்றின் நீண்டகால உடல்நலப் பாதிப்புகள் குறித்து இன்னும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருபுறம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள்..மறுபுறம் தாங்கள் அன்றாடம் பருகும் தண்ணீரின் தரம், சேமிப்பு முறை, பாதுகாப்பு ஆகியவற்றைக்கூடப் பரிசோதிக்காமல் இருக்கிறார்கள்!
நோய் வந்த பிறகு மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவு செய்வதைவிட, நோய் வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருப்பதுதான் உண்மையான புத்திசாலித்தனம்! விலை கொடுத்து வாங்குவது எல்லாமே ஆரோக்கியமானது அல்ல..
விலை உயர்ந்தது எல்லாமே தரமானதும் அல்ல! இது தண்ணீருக்கு மட்டுமல்ல… விளம்பரத்தையும் அந்தஸ்தையும் நம்பி நம்முடைய ஆரோக்கியத்தை அடமானம் வைக்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் பொருந்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *