தமிழகத்தில் நடிகர்களின் பெயரில் ரசிகர்கள் நற்பணி மன்றங்கள் மற்றும் இயக்கங்களைத் தொடங்குவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், நடிகை திரிஷாவின் பெயரிலும் புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு ராஜகோபால் என்பவர் இந்த இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளார். இதற்கு ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இயக்கத்தின் பெயர் மற்றும் லோகோவும் வெளியிடப்பட்டுள்ளன. லோகோவில் நடிகை திரிஷா கைகூப்பி வணங்குவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ள ராஜகோபால், ஏற்கெனவே அரசியல் பின்னணி கொண்டவர். 1996 முதல் 1998 வரை மதிமுகவில் தச்சநல்லூர் பகுதி வட்டச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் பாஜகவில் தச்சநல்லூர் மண்டல நிர்வாகியாகவும் இருந்துள்ளார். தற்போது எந்த அரசியல் கட்சியிலும் தாம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
திரிஷா மீதான தனது ரசிகர் பற்றின் காரணமாகவே இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ள ராஜகோபால், அவர் சினிமாவைத் தாண்டி பொதுவாழ்விலும் அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்பதே தனது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமையைப் போன்ற தலைமைத்துவம் தமிழகத்திற்குத் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவைப் போலவே திரிஷாவிடமும் ஆளுமை இருப்பதாகத் தான் கருதுவதாகக் கூறிய அவர், அதன் அடிப்படையிலேயே அவருக்கு ‘இளைய புரட்சித்தலைவி’ என்ற பட்டத்தைச் சூட்டியுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ராஜகோபால், விஜய்யுடன் இணைந்து திரிஷாவும் அரசியலில் பயணித்தால் ஜெயலலிதா ஆட்சியைப் போன்ற ஆட்சி அமையும் எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பேரவை வாயிலாக மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் திரிஷா அரசியலில் ஈடுபடுவதற்கான சூழல் உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ நடிகை திரிஷாவின் ஒப்புதலுடன் தொடங்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவரது அரசியல் வருகை குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


