
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்த அண்ணன், தங்கைக்கு பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசு தினம், பாரதியார் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து கடந்த வாரம் நடந்தது . முதல் நாளில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் சிலம்பம் ஒற்றைக் கம்பு வீச்சுப் போட்டியில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவி பாக்கியவதி தென்காசி மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றார்.
அதனை தொடந்து ஞாயிற்றுக்கிழமை மாணவர்களிடையே நடைபெற்ற போட்டியில் அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் பாக்கியவதியின் அண்ணன் கிஷோர்குமார் மாநில அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் ஊர் திரும்பிய அவர்களுக்குப் பள்ளி சார்பில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் அவர்களை ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், திமுக நகர செயலாளர் நெல்சன் , அமமுக நகர செயலாளர் சுப்பையா , காவல் நிலையம் சார்பில் எஸ்.எஸ்.ஐ செந்தில் ராணி மற்றும் மாணவர்கள்,ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து ஊர்வலமாக பள்ளி வரை சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற பிராத்தனை வேளையில் ஆசிரியர்கள், சக மாணவர்கள், காவல் துறையினர் ,பொதுமக்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை ஆகும். சிறிய ஆஸ்பெஸ்டாஸ் போடப்பட்ட வீட்டில் இருந்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் தந்தை முருகன் முட்டாய் வியாபாரம் பார்த்து வருகிறார். தாய் குணசுந்தரி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.


