
தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பாழடைந்த கட்டிடத்திலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு சாந்திநகர் பகுதியில் டபுள் ரோட்டில் ஜனதா கூட்டுறவு வங்கி கட்டிடம் உள்ளது. அதன் அருகே உள்ள பாழடைந்த கட்டிடம் உள்ளது. அந்தக் கட்டிடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்குச் சென்று பார்த்தபோது தலையில் கல்லைப் போட்டுப் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சடலத்தை மீட்டப் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த பெண் யார் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா எனப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

