
த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது தொடரும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆளுநர், அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியிருக்கக்கூடிய அதிகாரங்களை மீறி, ஆய்வுக்கூட்டம் நடத்தியது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். ஏற்கனவே, இருந்த முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி, இத்தகைய அணுகுமுறைகளை மேற்கொண்டபோதெல்லாம் தமிழகம் ஒட்டுமொத்தமாகக் கண்டித்திருக்கிறது. ஆகவே, இப்போதுள்ள ஆளுநரும் அதே அணுகுமுறையைத் தொடர்ந்து கடைபிடிப்பது என்பது பொருத்தமானது அல்ல என்று கூறினார்.
இடைத்தேர்தலைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். மேலும், தாங்கள் அந்த அணியிலேயோ, இந்த அணியிலேயோ கிடையாது. எனவே, தாங்கள் இடதுசாரி அணி என்பதில் தனித்துச் செயல்படுகிறோம். அதே நேரத்தில், த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது தொடரும் என்று உறுதியளித்தார். அதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது.கரூர் விவகாரத்தில் மத்திய புலனாய்வு துறை விசாரணை இருக்கும் போதே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்று கூறினார்.



