
திமிரி அருகே அம்மன் கோவிலில் சிசிடிவி கேமராவை உடைத்து மின்சாரத்தை துண்டித்து10 பவுன் நகைகளைத் கொள்ளையடித்த மர்மநபர்களை போலிசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வளையாத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நல்லாத்தூர் வாழியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்தக் கோவிலுக்கு அப்பகுதி சேர்ந்த கிராம பொதுமக்கள் தினந்தோறும் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை வழிபாடு செய்துவிட்டு செல்வது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு, பக்தர்கள் வழிபாடு முடித்து விட்டுப் பிறகு கோவில் பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் வழக்கம்போல் இன்று காலைக் கோவிலைத் திறந்து உள்ளார். அப்போது கருவறையில் பூட்டு உடைக்கப்பட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திமிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் கொண்ட குழு விரைந்து வந்து கோவிலைப் பார்வையிட்டுச் சோதனை மேற்கொண்டனர். இதில் மர்ம நபர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் கோவிலுக்கு உள்ளே புகுந்து கோவிலில் இருந்த 5 சிசிடிவி கேமராவை உடைத்ததோடு மின்சாரத்தையும் துண்டித்துள்ளனர்.
தொடர்ந்து கருவறைக்குள் உள்ளே சென்ற மர்மநபர்கள் இருட்டில் எதுவும் தெரியாததால் அருகே இருந்த குத்து விளக்கு தீப வெளிச்சத்தில் பீரோவை உடைத்து அதிலிருந்த சுமார் 10 பவுன் நகை மற்றும் 7 ஆயிரம் சில்லரை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமிரி அருகே கிராம பகுதிகளில் வீடுகள் அதிகமாக நிறைந்த பகுதியில் இருந்த அம்மன் கோவிலில் நகை பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

