கரூர் வழக்கு – திமுக தாக்கல் செய்த மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Advertisements

கரூர் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தமிழக அமைச்சர்களாக உள்ளதால் சாட்சிகளைக் கலைக்கக் கூடும் என்று கூறித் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள் கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் சிபிஐ புலனாய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் கரூர் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தமிழக அமைச்சர்களாக உள்ளதைச் சுட்டிக்காட்டித் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கரூர் வழக்குத் தொடர்பான அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு வழக்கின் சாட்சிகள், சான்றுகளைப் பாதிக்கும் நோக்கத்துடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே அவர் மீது உரிய புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது.

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் ஜூலை 10ஆம் நாள் கரூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணை வழங்க உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

தவெக அரசின் இந்த நடவடிக்கைகள் சிபிஐ விசாரணையைப் பாதிக்கக் கூடும் என்பதால், நிகழ்ச்சியை நடத்துமுன்பு சிபிஐயிடம் அனுமதி பெறும் வகையில் வழிகாட்டுதல்களை வகுக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை நிறைவடையும் வரை கரூர் வழக்குக் குறித்து முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் பொதுவெளியில் கருத்துக்கூறத் தடை விதிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர் முறையீட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிப நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆசானுத்தீன் அமானுல்லா, சீல் நாகு அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *