
வீடியோ கேம் விளையாடியவருக்கு மனநலம் பாதிப்பு!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் தொடர்ந்து செல்போனில் அதிகளவு வீடியோ கேம் விளையாடிய வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டு, கை மற்றும் உடல்களில் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காலிவாரி கண்டிகை பகுதியைச் சேர்ந்த 18 வயதான வாலிபர், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர் அதிகளவில் வீடியோ கேம் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இவரது தந்தை இறந்த நிலையில், அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்குச் சென்றிருந்த வாலிபர், இரவு, பகல் பார்க்காமல் இடைவிடாமல் செல்போன் மூலம் வீடியோ கேம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் அவர் உடலில் திடீரென்று சில மாற்றங்கள் ஏற்பட்டது. விரல்கள் பாதிக்கப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டது போன்று அவர் நடந்துகொண்டார். அவரது நடவடிக்கையைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை அவரது உறவினர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அவர் மேலும் பாதிக்கப்படாமல் இருக்கு வாலிபரின் கை மற்றும் கால்களைக் கட்டி ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகளவு வீடியோ கேம் விளையாடியதால் வாலிபரின் கை மற்றும் உடலில் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகிறது. அதிகளவு செல்போன் பயன்பாடே ஆபத்தைத் தரும் சூழலில், வீடியோ கேம்மிற்கு அடிமையாகி, இளம் வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



