
மாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றி, கவர்ச்சிப் பேச்சுகளால் மக்களிடம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் பகுதியில் உள்ள வாக்காளர்களை சந்தித்து நன்றிகளை தெரிவித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
இதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, திரையிலும், திரை உலகிலும் வசனங்கள் பேசலாம். ஆனால், மக்கள் பிரதிநிதியாக அரசுப் பொறுப்பேற்று, முதல்வரான பிறகும் திரைப்பட வசனங்கள் பேசுவதைத் தவிர்த்து, மக்களின் அவசரத் தேவைகள் என்னவோ அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு, திமுகவை விமர்சிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதாகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றி, கவர்ச்சிப் பேச்சுகளால் மக்களிடம் வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், முதலில் ‘மாற்றம்’ என்றால் என்ன என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



