
மூன்று மாதங்கள் தொடர்ந்து முயன்றும் முடியாத த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி, தேர்தல் முடிவு வெளியான ஒரே நாளில் நடந்தேறி அரசியல் களத்தை அதிரவைத்தது. அந்தக் கூட்டணியின் பலனாக காங்கிரஸ் கட்சி சார்பில், இரண்டு அமைச்சர்களும் அரியணை ஏறினார்கள்.
விரைவாக அமைந்த இந்தக் கூட்டணிக்குள் விரைவிலேயே விரிசலும் விழுந்துவிடுமோ என்கிற அச்சம் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்திருக்கிறது. முதல்வரின் டில்லிப் பயணம், பா.ஜ.க-வின் மறைமுக அழுத்தம் உள்ளிட்டவை இந்த அச்சத்துக்குப் பின்புலமாக இருக்கின்றன.
தி.மு.க-வுடன் கூட்டணியில் காங்கிரஸ் இருந்தபோது, பா.ஜ.க எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அதை தி.மு.க-வே எதிர்கொண்டு சமாளிக்கும். இயற்கையாகவே தி.மு.க-வுடன் காங்கிரஸ் கெமிஸ்ட்ரி ஒத்துப்போனது. பெரும்பான்மைக்கான இடங்கள் இல்லாமல் த.வெ.க தவித்தபோது, முதல் ஆளாக காங்கிரஸ் வலியச் சென்று ஆதரவு கொடுத்தது..
த.வெ.க கூட்டணியால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் பலம் இருக்கும் என நினைத்தது.. ஆனால், த.வெ.க-தரப்பு வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தைக்கூட காங்கிரசுக்கு தரவில்லையோ என்கிற வருத்தம் இருக்கிறது.தி.மு.க-விடம் காங்கிரஸ் பிரிவதாக சொல்ல நேரம் கொடுக்காமல், த.வெ.க-வுடன் அவசரமாகக் கூட்டணியை இறுதி செய்ய ஆர்வம் காட்டியதே பிரவீன் சக்ரவர்த்தியும், கிரிஷ் சோடங்கரும்தான். த.வெ.க தரப்பில் இவர்கள் இருவரிடமே நேரடியாகப் பேசி, கூட்டணியை முடிவு செய்தார்கள்.
கூட்டணி உறுதியானபோது, இரண்டு அமைச்சர்கள், பத்து வாரியங்கள், பதினைந்து சதவிகித அரசு வழக்கறிஞர்கள், உள்ளாட்சியில் 25 சதவிகித இடங்கள் எனப் பேசப்பட்டது. ஆனால், இரண்டு அமைச்சர்கள் தவிர வேறு எதுவும் காங்கிரசுக்கு கொடுப்பதாக தெரியவில்லை. கார்த்தி சிதம்பரம், இதை ஒப்பந்தமாக எழுதிக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் எந்தச் சிக்கலும் வராது என்றார். ஆனால், பேச்சுவார்த்தைக்குச் சென்றவர்கள் அதைச் செய்யவில்லை.
த.வெ.க ஆட்சியமைக்க முதலில் முன்வந்ததே காங்கிரஸ் கட்சிதான். விஜய் மீதுள்ள பிரியத்தால் அவரது பதவியேற்பு விழாவில்கூட கலந்து கொண்டார் ராகுல். ஆனால், கேரளாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சதீசன் பதவியேற்பு விழாவுக்கு வருவதாக முதலில் சொன்ன விஜய், பிறகு வரவில்லை. அதேபோல், பிரதமரைச் சந்திக்க டில்லிக்குச் சென்றார். அரசுரீதியான சந்திப்புகள் முடிந்த பிறகு அவர், சோனியாவையும் ராகுலையும் சந்திப்பதாக த.வெ.க தரப்பு சொன்னது. அந்தச் சந்திப்பும் நடக்கவில்லை.
பா.ஜ.க விருப்பத்துக்கு மாறாகக் கூட்டணி வைத்திருப்பதால் முதலில், காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிடச் சொல்லி பா.ஜ.க தரப்பு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரசுக்கு தகவல் வருகிறது. தி.மு.க-வைப்போல் பா.ஜ.க-வை வலுவாக த.வெ.க எதிர்க்குமா என்ற சந்தேகமும் காங்கிரசுக்கு உள்ளது. பா.ஜ.க-வின் அழுத்தத்துக்கு த.வெ.க ஆட்பட்டால், காங்கிரஸ் நிலை சிக்கலாகிவிடும். தி.மு.க-வும் இனி காங்கிரசை ஏற்றுக்கொள்ளாது.
த.வெ.கவுக்கு பெரும்பான்மை கிடைக்காத அன்றைய சூழலில், யாருடன் அணிசேரலாம். என்கிற விவாதம் எழுந்தது. ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா இருவரும்தான் கொள்கைக்கு மாறாகக் கூட்டணி வைக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிவைப்பது எதிர்கால அரசியலுக்கு நல்லது. நீண்டகால உறவைப் பேண முடியும். தி.மு.க-வை எளிதாக வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி வேண்டும் என முடிவெடுத்தனர்.
அதனாலேயே காங்கிரசுக்கு உரிய அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியை டில்லி பா.ஜ.க விரும்பவில்லை. எனவே, இனி அவர்கள் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையைத் தொடங்குவார்கள் என்பதை முதல்வரும் உணர்ந்திருக்கிறார். சிறுபான்மை மக்களின் ஆதரவுடனேயே இந்த அரசு அமைந்திருக்கிறது. த.வெ.க., பா.ஜ.க சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் எதிர்காலத்தில் காங்கிரசுக்கு அரசியலே இல்லாமல் போய்விடும். இதையெல்லாம் காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம், முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோதே, ‘காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என டில்லி அழுத்தமாகச் சொன்னது. அதையும் மீறி கூட்டணி வைத்தார்கள். காங்கிரஸ் இல்லாத இந்தியாவைக் கட்டமைக்க நாங்கள் முயன்றால், இவர்களோ தமிழக அரசிலேயே காங்கிரசுகுப் பங்கு கொடுக்கிறார்கள். அதை பா.ஜ.க-வால் எப்படி ஜீரணிக்க முடியும். டில்லிக்கு விஜய் வந்த போதே, நாசுக்காக இதை உணர்த்திவிட்டார்கள். இனி தமிழக அரசின் கஜானா நிரம்ப வேண்டுமெனில், காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டுவதைத் தவிர த.வெ.க-க்கு வேறு வழியில்லை. ஆறு மாதங்களுக்குள் தமிழக அரசியல் களத்தில் நடக்கப்போகும் மாற்றங்களைப் பொறுத்திருந்து பாருங்கள் .


