ராமதாஸ் IN.. திருமா OUT? விசிக கோபத்துக்கு என்ன காரணம்..? 

Advertisements
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது. குறிப்பாக, ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகுறித்த பேச்சுகள் தீவிரமாகி வரும் நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடு, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பாமக இடம்பெறும் எந்த கூட்டணியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது. இது இன்றைய முடிவு அல்ல. 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட தீர்மானம்” என்று திருமாவளவன் தெளிவாக கூறியிருப்பது, திமுகவின் கூட்டணி கணக்கை சிக்கலாக்கியுள்ளது. அப்படி என்னதான் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது? ஏன் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை விசிக இன்னும் மாற்றாமல் வைத்திருக்கிறது? என்பதே இப்போது எழும் முக்கிய கேள்வி. தமிழக அரசியலில் பாமக ஒரு முக்கியமான சாதி அடிப்படையிலான அரசியல் கட்சியாக இருந்து வருகிறது.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே அந்த கட்சி, நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணி மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி என இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, ஏற்கனவே
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துவிட்டது. ஆனால், ராமதாஸ் தலைமையிலான பாமக எந்த கூட்டணிக்கு செல்லப்போகிறது என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்த நிலையில், ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வரலாம் என்ற அரசியல் கணக்கு பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடனும் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற தகவல்களும் அவ்வப்போது வெளியாகின. இருப்பினும், திமுக கூட்டணியில் பாமக இணைவதில் முக்கியமான தடையாக இருப்பது விசிகதான்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
திமுக -விசிக உறவு என்பது தேர்தல் கணக்கை தாண்டி, கருத்தியல் அடிப்படையிலும் வலுவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே, “விசிகவா? பாமகவா?” என்ற தேர்வு வந்தால், திமுகவின் முன்னுரிமை விசிகவுக்கே என்பது அரசியல் வட்டாரங்களில் பரவலாக நிலவும் கருத்தாக உள்ளது. அதனால்தான், இதுவரை ராமதாஸ் தலைமையிலான பாமகவை திமுக வெளிப்படையாக கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விரிசலுக்கான வேர்கள் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு செல்லும். அந்த தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. ஆனால், அந்த கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கவில்லை. அந்த தேர்தலுக்குப் பிறகு, பாமக – விசிக இணைப்பு திமுகவுக்கு எந்த அரசியல் பலனையும் தரவில்லை என்ற கருத்து திமுக தரப்பில் மட்டுமல்ல, அரசியல் ஆய்வாளர்களிடையிலும் பரவலாக பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பாமக மற்றும் விசிக இடையே கருத்து மோதல்கள் தீவிரமடைந்தன.
2012-ஆம் ஆண்டு தர்மபுரி கலவரம், 2013-ஆம் ஆண்டு மரக்காணம் கலவரம் போன்ற சம்பவங்கள், இரு கட்சிகளுக்கிடையேயான உறவை முற்றிலும் பதற்றமடையச் செய்தன. வன்னியர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக பாமகவும், தலித் மக்களின் அரசியல் குரலாக விசிகவும் நேரடியாக மோதும் நிலை உருவானது. இதற்கு முன்பு வரை, ராமதாஸும் திருமாவளவனும் தமிழ் மொழி, ஈழப் பிரச்சனை, சமூக நீதி
போன்ற பல விஷயங்களில் ஒரே மேடையில் குரல் கொடுத்தவர்கள். ஆனால், 2011-க்குப் பிறகு அவர்கள் அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக மாறினர்.
அதன் பின்னர் நடந்த எந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பாமகவும் விசிகவும் ஒரே கூட்டணியில் இடம் பெறவில்லை. இந்த பின்னணியில்தான், பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்ற திருமாவளவனின் உறுதியான நிலைப்பாடு உருவானது. கடந்த ஆண்டு பாமகவில் உட்பிளவு ஏற்பட்டபோது, ராமதாஸுக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தாலும், அது கூட்டணி அரசியலுக்கு பொருந்தாது என்பதையும் அவர் இப்போது தெளிவுபடுத்தியுள்ளார். அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக
கூட்டணிக்கு சென்றுவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக திமுகவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், அதற்கு விசிக வெளிப்படையாகவே முட்டுக்கட்டை போட்டு விட்டது. பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறினாலும், அவரது நிலைப்பாடு திமுகவுக்கு கடும் அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், திமுக எந்த முடிவை எடுக்கப்போகிறது? விசிகயை தக்க வைத்துக்கொள்வதா? அல்லது ராமதாஸ் தலைமையிலான பாமகவை அணுகுவதா? என்பதே, 2026 தேர்தல் அரசியல் கணக்கில் முக்கிய திருப்பமாக மாறக் கூடும் என அரசியல் வட்டாரங்கள் உற்றுநோக்கி வருகின்றன.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *