
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு விரிவாகப் பதிலளித்து பேசினார். அப்போது திருவண்ணாமலை தீபத்துடன் திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஒப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.
“திருவண்ணாமலை மலையின் உச்சியில் தீபம் ஏற்றிய பின், மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு? 350 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் மலையின் உச்சத்தில் தீபம் ஏற்றுகிறார்கள்.
அதற்குப் பதிலாக வேறு ஐந்து இடத்தில் தீபம் ஏற்றினால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அது போன்றதுதான் திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது,” என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தின் வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இரு மதங்களுக்கு இடையே மோதலை உண்டாக்க வேண்டும் என்று பாஜக நினைத்தது நடக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
1920 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கம்தான் உள்ளது. அப்போது கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான இடம் என்று தீர்ப்பு உள்ளது. 1996 ஆம் ஆண்டில், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றால் அறநிலையத் துறை அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
“ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்பவர்கள் மட்டுமல்ல; மூத்தவர்கள் சிரிப்பிலும் இறைவனைக் காண்பவர்கள் நாங்கள். ராஜராஜ சோழன் போல 100 அல்ல, 500 ஆண்டுகள் கழித்தும் ஆன்மிகத்தில் முதலிடம் வகித்த முதல்வராக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குவார்,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.
2014 இல் வழங்கப்பட்ட தீர்ப்பையே இறுதி தீர்ப்பாக எடுத்து அரசு தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்விக்கு, “சட்டத்திற்கு அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளது. இறுதிவரை அரசு மத மோதலைத் தடுக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்” என்று அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.
மத மோதல்களை ஏற்படுத்த நீதிபதிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்ற விமர்சனம் குறித்துக் கேட்கப்பட்டபோது, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இது குறித்துப் பதில் சொல்ல விரும்பவில்லை என்று அவர் மறுத்துவிட்டார்.மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவிக்காதது குறித்துக் கேட்கப்பட்டதற்கு, “அது குறித்து அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்,” என்று சேகர்பாபு பதில் அளித்தார்.



