
தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் முருகமலை, தாமரைக்குளம், வடுகபட்டி, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் வெளிப்பாளையம், காடம்பாடி, பால் பண்ணைச்சேரி, நாகூர், தெத்தி, சங்கமங்கலம், பாலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான பாளையம்பட்டி, ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சுக்கில நத்தம், வெள்ளையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழையின்றி மேக மூட்டமாக காணப்பட்டது.
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தேவநேரி, எருமை வெட்டிபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் டிராக்டர் மூலம் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். எங்கும் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சோழவரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறியதில் சுமார் 200 ஏக்கர் விளைநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


