ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்!

Advertisements

2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் செம்பு உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதன் எட்டாம் ஆண்டு நினைவுநாளில் அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான தாமிர உருக்காலையில் வெளியாகும் நச்சுக்காற்றால் பொதுமக்களுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்படுவதால் அந்த ஆலையை மூடக் கோரி 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் தொடர்ந்து 100 நாள் போராட்டம் நடத்தினர். நூறாவது நாளான மே 22ஆம் நாள் தூத்துக்குடியில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். அப்போது போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதேபோல் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் தடியடி நடத்தி அட்டூழியம் செய்தனர். இதில் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மறுநாளும் தூத்துக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த அட்டூழியம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்துத் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கியால் சுட்டவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு அதைக் கிடப்பில் போட்டுவிட்டது.
அந்தத் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை இப்போதைய முதலமைச்சரான ஜோசப் விஜய் அப்போது இரவோடு இரவாகச் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிதியுதவி செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தூய காற்றுக்காக நச்சாலையை எதிர்த்துத் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், தடியால் அடித்தும் அட்டூழியம் செய்தனர். அந்த அரச வன்முறையின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டித் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் வன்முறையில் உறவினரை இழந்த குடும்பத்தினரும், சமூக அமைப்பினரும், பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தபடி, அட்டூழியம் செய்த வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் மீது இன்றைய தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *