கேள்வியின் நாயகி மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்படுமா ?
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவிக்கு வேட்டு வைக்கும் விதமாக அவரை எம்பி பதவியில் இருந்து நீக்க கோரி பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நன்னடத்தைக் குழு பரிந்துரைத்துள்ளது. தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் பணம் பெற்றுக் கொண்டு மக்களவையில் ஆளும் பாஜக கட்சியினர் குறித்து அவதூறு மற்றும் கேள்விகள் கேட்டது தொடர்பாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் அவரது மக்களவை உறுப்பினர் பதவியை பறிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு பாஜக உறுப்பினர் வினோத் குமார் சொங்கர் தலைமையிலான குழு பரிந்துரை அளித்துள்ளது.
மகுவா மொய்த்ராவின் பதவி பறிப்பிற்கு ஆதரவாக சிலர் வாக்களித்துள்ள நிலையில் நன்னடத்தை குழு அளித்துள்ள பரிந்துரை மீது மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் அதிக வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்படும். மகுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அணி திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தனக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் சட்ட நெறிமுறைகளை பின்பற்றவில்லை வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்டுள்ளது. என் மீது பழி சுமத்தி தன்னை நீக்க்வேண்டும் என்ற நோக்கம் மற்றும் என் மீது பயம் உள்ளது. ஆனால் வாக்கு அதிகம் பெற்று மக்களவைக்கு வரப்போவது உறுதி என்றும் மகுவா கூறினார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் மூன்றாம் தேதி வெளிவர உள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கும் நேரத்தில் இவரின் பிரச்சனையும் பூதாகாரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.