தாராபுரம் தனித்தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பெரிய குமாரபாளையம் பகுதியில் சத்யபாமா பிரசாரம் செய்தபோது, சில பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பொட்டிக்காம்பாளையம் பகுதியில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் பாதுகாப்புடன் சென்ற சத்யபாமா, பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து வாகனத்தை விட்டு இறங்காமல் அங்கிருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மீனாட்சிபுரம் பகுதியில் சத்யபாமா பிரசாரத்திற்காக தவெக நிர்வாகிகள் மைக் செட், பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், அவர் அங்கு வராததால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேட்பாளர் இல்லாமலேயே வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு நாட்கள் பிரசாரத்தை சத்யபாமா ரத்து செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரசாரத்திற்கு வராதது குறித்து தவெக வட்டாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வேறு கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக இருந்த சத்யபாமா அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தவெக சார்பில் போட்டியிடுவது தொடர்பாகவும் சில இடங்களில் எதிர்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதல்வர் விஜய் விரைவில் தாராபுரத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், சத்யபாமாவின் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தொகுதியில் அவருக்கு எதிராக எழும் எதிர்ப்புகள் கவனம் பெற்றுள்ளன.


