அமைச்சராக வலம் வந்த ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியை, இன்று நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி பாதுகாப்புத் தேட வைத்திருக்கிறது அந்த ரூ.100 கோடி லஞ்சப் புகார் வழக்கு.
என்ன நடந்தது?
பிரச்சினையின் தொடக்கம் முந்தைய திமுக ஆட்சிக் காலம். தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி (DTCP), சிஎம்டிஏ (CMDA) அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வச் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி மாபெரும் பண வசூல் வேட்டை நடந்ததாகப் புகார் எழுந்தது.
ஒன்று, இரண்டு லட்சங்கள் அல்ல… சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டதாக, சில மாதங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் டி.சி.இளங்கோவன் உள்ளிட்ட பல பள்ளி நிர்வாகிகள் அதிரடி புகார் ஒன்றை அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் களத்தில் இறங்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார், கடந்த ஜூன் 27-ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்தனர். அதில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
விசாரணை தீவிரமடைந்த நிலையில், வழக்கில் முதல் விக்கெட்டாக பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அன்பில் மகேஸ் தரப்பு நிலைகுலைந்தது.அடுத்த கட்டமாக, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி வேட்டையில் இறங்கினர்.
அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 18-ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஸ் நேரில் ஆஜரானார். மணிக்கணக்கில் நடந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள், அவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
இன்று நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன்: “வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) நகல் இன்னும் முழுமையாகக் கைக்கு வரவில்லை என்றாலும், சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இந்த மனுவை உடனடியாக விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்” என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.
அன்பில் மகேஸ் தரப்பின் அவசரத்தைக் கருத்தில் கொண்ட நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை உடனடியாக முடித்து, வழக்கின் விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். சென்னையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தொடுத்துள்ள இந்த வழக்கு, அன்பில் மகேஸின் அரசியல் பயணத்தில் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
நீதிமன்றம் இந்த மனுவை ஏற்று வழக்கிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்குமா? அல்லது, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்து அன்பில் மகேஸை மேலும் சிக்கலில் தள்ளுமா? வரும் புதன்கிழமை உயர் நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்புதான், அன்பில் மகேஸின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!


