
2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பெரிய இலக்கை கொண்டு ஒவ்வொரு பட்ஜெட் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவது குறித்து, இணையவழி கருத்தரங்கில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பெரிய இலக்கை நோக்கிய ஒரு படியாக ஒவ்வொரு பட்ஜெட்டும் செயல்படுகிறது என்று கூறினார்.
இதனால், நம்பிக்கை சார்ந்த சீர்திருத்தங்கள் காரணமாக நாடு தற்போது சீர்திருத்த எக்ஸ்பிரஸில் சவாரி செய்து வருகிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
11 ஆண்டுகளுக்கு முன்பு 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பொது மூலதனத்தை 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசாங்கம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்த்தியுள்ளது என்றார்.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தையும் தொழில்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிதி நிறுவனங்கள் நடைமுறை தீர்வுகளை வடிவமைக்கவும் சந்தை நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தொடர்பான பட்ஜெட் முடிவுகள் தேசிய பொருளாதாரத்திற்கு நிரந்தர பலத்தை அளிக்கின்றன என்று கூறினார்.



