
நீரில் மூழ்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அலைக்கழித்ததாக கூறி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை முன்பு மூதாட்டின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மனைவி ஜெயலட்சுமி.இவர் தனது மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் ஊரணி குளத்தின் கரையோரம் அடைக்கலாபுரம் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து சாத்தான்குளம் தீயணைப்பு துறை மற்றும் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று மாலை 3 மணி வரை பிரேத பரிசோதனை செய்யாமல் திருச்செந்தூர் அரசு மருத்துவ துறையினர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடலை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.பின்னர் அங்கிருந்து ஜெயலட்சுமியின் உறவினர்கள் அவரது உடலை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டி வசதி இல்லாததால் மூதாட்டியின் உடலை இன்று பிரேத பரிசோதனை செய்து தருமாறு அவரது உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நாளை காலை பிரேத பரிசோதனை செய்து தருவதாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமியின் உறவினர்கள் நேற்று இரவிலிருந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கும் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கும் மாறி மாறி எங்களை அலைக்களிக்கிறார்கள் இதற்கு ஒரு முடிவு தெரிய வேண்டும் என்று கூறி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை முன்பு உள்ள நாகர்கோவில் திருச்செந்தூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அருள் இறந்து போன ஜெயலட்சுமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.உடனடியாக குளிர்சாதன பெட்டிக்கு ஏற்பாடு செய்து நாளை காலை ஜெயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து தருவதாக உறுதி அளித்தார்.அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலையில் குளிர்சாதன பெட்டியும் இல்லாமல் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.



