
நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாகக் கார் மோதி விபத்தில் 4 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
அம்மாபேட்டை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள சக்தி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 17-ந்தேதி இவரது மனைவி பாரதி (25), மகன் ஸ்ரஏயன் (4) மற்றும் 4 மாத குழந்தை மேக்னா ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்குச் செல்வதற்காகத் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். காரை ராஜேஷ் ஓட்டிச் சென்றார்.
ஈரோடு மேட்டூர் ரோட்டில் அம்மாபேட்டை அடுத்து கோனேரிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாகக் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவையுள்ள தனியார் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டு அங்குச் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் 4 மாத குழந்தை மேக்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் 4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


