
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார், தனது தாயாரின் மறைவால் ஏற்பட்ட பெரும் துயரத்திற்குப் பிறகும், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் கார் பந்தயப் பணிகளுக்குத் திரும்பியுள்ளார். ‘வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்’ என்ற உத்வேகத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படப் பணிகளுக்குப் பிறகு, கார் ரேசிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அண்மையில் ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய அணியைத் தொடங்கினார். இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச கார் பந்தயப் களங்களில் பங்கேற்றுப் பல பரிசுகளை வென்று சாதனை படைத்து வருகிறது.
இந்தச் சூழலில், கடந்த மே 30-ஆம் தேதி அஜித்குமாரின் தாயார் காலமானார். தாயின் மறைவு குறித்து உருக்கமாகப் பேசியிருந்த அஜித், “அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர்; எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்த அவரது வாழ்க்கை மதிப்புகள் என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது தாயாரின் மறைவிற்குத் தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் ஒட்டுமொத்தத் திரை உலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், அஜித்தின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தனர்.
தாயை இழந்த சோகத்தில் இருந்த அஜித்குமார், அந்தப் பெருந்துயரிலிருந்து மீண்டு வெறும் 4 நாட்களிலேயே மீண்டும் கார் ரேசிங் பணிகளுக்குத் திரும்பியுள்ளார். அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறவிருக்கும் மிக முக்கிய சர்வதேச கார் பந்தயப் போட்டிக்குத் தயாராகும் புகைப்படங்கள், அவரது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் “கனத்த இதயத்துடன் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால், வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்.”
கனத்த இதயத்தோடு இருந்தாலும், தனது தொழில்முறை கடமைகளைத் தள்ளிப்போடாமல் பிரான்ஸ் நாட்டுப் போட்டிக்குத் தயாராகி வரும் நடிகர் அஜித்குமாரின் இந்த மனவலிமையைக் கண்டு, அவரது ரசிகர்களும் திரையுலகினரும் நெகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.




