எடப்பாடியின் ஆணவத்தை அடக்கனும்…செங்கோட்டையன் போட்ட திட்டம்.!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் அவர்களுடைய கோட்டை என சொல்லப்படக்கூடிய மேற்கு மண்டலத்தில் தவெக அபார வெற்றி பெற்றுள்ளது

தெற்கிலும் அதிமுகவுக்கு பெரிதாக ஒன்றுமில்லை. டெல்டாவிலும் அதிமுகவின் வழக்கமான முக்கிய புள்ளிகள் மட்டுமே வெற்றி பெற்றனர். வடக்கு மண்டலத்தில் மட்டுமே அதிமுகவுக்கு பாமக கூட்டணி ஒத்துழைப்பால் கொஞ்சம் சீட் கிடைத்துள்ளது.இந்த நிலையில் தான் அதிமுகவுக்குள் மீண்டும் தலைமை பதவிக்கான மோதல் ஆரம்பித்துவிட்டது.

முன்னாள் அமைச்சர் இப்போதைய மயிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிபி சண்முகம் ஒருங்கிணைப்பில் ஒரு குழு உருவாகி நாம் விஜய்க்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளனர். மேலும் அவர்கள் இரட்டை தலைமை மீண்டும் வேண்டுமென்ற கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

இது அதிமுகவுக்குள் மீண்டும் பழைய பல்லவியை பாட ஆரம்பித்து விட்டார்களோ என்ற நிலையை உண்டாக்கியுள்ளது.நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பசுமைவழிச் சாலை இல்லத்தில் அதிமுக மாவட்ட செயலாளரின் கூட்டத்தை கூட்டினார்.

இந்த கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், எம் எ சேகர், ஏற்காடு சித்ரா, வளர்மதி, ஆர் பி உதயகுமார், குட்டியப்பா, கேசி கருப்பண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த கூட்டத்தில் மிகக் கணிசமான மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவில்லை. எடப்பாடி கூடிய கூட்டத்தில் மொத்தம் 35 மாவட்ட செயலாளர்கள் தான் பங்கேற்றுள்ளனர்.

சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, வீரமணி உள்ளிட்ட முக்கியமான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி கூடிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதிலே கூடுதல் விசேஷம் என்னவென்றால் எடப்பாடி கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற வளர்மதி, கோகுல இந்திரா, கேசி கருப்பண்ணன் உள்ளிட்ட பத்து பேர் எடப்பாடி கூட்டம் முடிந்ததும் சி.வி சண்முகம் வீட்டுக்கு சென்று அவரையும் சந்தித்து பேசினார்கள்.

இதனால் யார் எங்கே இருக்கிறார்கள் என்ற குழப்பம் அதிமுகவிலே பலருக்கும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எஸ் பி வேலுமணியும் சி.வி. சண்முகமும் எடப்பாடி அதிமுக தலைமைப் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். “2021 மற்றம் 2024ம் ஆண்டு நடந்த சட்டமன்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி தலைமையை ஏற்று தான் சந்தித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அவருடைய தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் தான் செயல்பாடுகள் இருந்தன.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் அதன் மூலம் தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்று செங்கோட்டையன் உள்ளிட்ட பல்வேறு மூத்த நிர்வாகிகளும் கூறிய போது, அதை எடப்பாடி முழுமையாக மறுத்தார். செங்கோட்டையன் இதற்காக பகிரங்கமாக கோரிக்கை வைத்த போது அவரை கட்சியிலிருந்து நீக்கினார். இதே நிலைதான் மற்றவர்களுக்கும் என்பதை எடப்பாடி அப்போது சொல்லாமல் சொன்னார். சசிகலாவும் கடைசி வரை காத்திருந்து விட்டு தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார்.

இப்படி அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடியின் அணுகுமுறைகள் முக்கிய காரணமாக இருந்தன. எனவே மீண்டும் இந்த அணுகுமுறைகள் தொடரக்கூடாது என்ற அடிப்படையில் தான் சி.வி. சண்முகம் இப்போது வட மாவட்ட எம்எல்ஏக்கள் மட்டுமல்ல மாநில முழுதும் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்களை ஒருங்கிணைத்துள்ளார்.

அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணி நியமிக்கப்பட வேண்டும். துணைத் தலைவராக சிவி சண்முகம் செயல்பட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.. மேலும் அதிமுகவுக்கு மீண்டும் இரட்டை தலைமை அதாவது கூட்டு தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அப்போதுதான் அனைவரையும் ஒருங்கிணைத்து அரவணைத்து செயல்பட முடியும்” என்று அவர்கள் வலுவாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தான் சண்முகம் வீட்டில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. இது மட்டுமல்ல முதலமைச்சர் விஜய் சந்திப்பதற்கு சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கோட்டையன் மூலமாக நேரம் கேட்டு வருகின்றனர்.

நேற்றுதான் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். பெரும்பான்மை நிரூபிப்பதற்காக அவருக்கு ஆளுநர் மூன்று நாட்கள் தான் அவகாசம் அளித்துள்ளார். அது தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் அரசு பணிகள் இருப்பதால் உடனடியாக சண்முகத்துக்கு விஜய் அப்பாயின்மென்ட்டை செங்கோட்டையினால் வாங்கித் தர இயலவில்லை. ஆனால், விரைவில் விஜயை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.

இதற்குள் எடப்பாடி பழனிசாமி போர்க்கொடி தூக்கி உள்ள சி வி சண்முகம் தரப்பினரை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி சார்பாக அவருடைய வலது கரம் ஆத்தூர் இளங்கோவன் சண்முகத்தை சந்தித்து பேசியுள்ளார்.
முன்பு போல அதிரடியாக கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுடன் இறங்கி போய் சமாதானம் பேச முயற்சி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.

விஜய் ஏற்கனவே விளிம்பு மெஜாரிட்டியில் இருக்கும் நிலையில், சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி விஜய்க்கு ஆதரவு அளித்தால் விஜய் அரசின் உறுதி செய்யப்பட்டு விடும். எடப்பாடியின் ஆணவப் போக்கும் அடக்கப்படும் என்பதுதான் செங்கோட்டையன் போடும் கணக்கு.

இந்த செங்கோட்டையன் கணக்கிற்கு பின்னால் சசிகலாவும் இருக்கிறார் என்பதுதான் எடப்பாடியின் சந்தேகம். அதனால் இப்போது இந்த பிரச்சனையை மிகவும் கவனமாக சமாதானம் பேசி முடிக்க முயற்சி செய்து வருகிறார் எடப்பாடி. இது பலிக்குமா அதிமுக மீண்டும் உடைவது தடுக்கப்படுமா, அதிமுகவில் கூட்டுத் தலைமை உருவாகுமா? என்று அக்கட்சி நிர்வாகிகளிடம் மீண்டும் டென்ஷன் ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக உடைந்து போனதற்கு ஆதாரமாக இன்று சட்டமன்ற பேரவைக்கு தனது ஆதரவாளர்களான 5 பேருடன் எடப்பாடி வந்தார். எஸ்.பி. வேலுமணி தனியாக தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 30 பேருடன் வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *