காங்கிரஸுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிரடி ஷாக்!

டெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக திமுக தற்பொழுது அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு இழைத்த துரோகத்தினால் கழகத் தோழர்கள் மிகுந்த மனக்காயமுற்றிருக்கிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டர்களின் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், காங்கிரஸ் பங்கேற்கும் இந்த ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியா’ கூட்டணி தொடங்கியதிலிருந்து அதன் மையச் சக்தியாக திமுக இயங்கியதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார் என்பதை ஒட்டுமொத்தக் கூட்டணியும் அறியும் எனக் கூறியுள்ளது.

மேலும், ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிராகத் திணிக்கப்பட்ட பின்வரும் முக்கிய விவகாரங்களை ஆரம்பம் முதலே முதல் இயக்கமாக நின்று திமுக துணிச்சலுடன் எதிர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது: நீட் (NEET) தேர்வு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு, தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாகத் திணிக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். (SIR). தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள். ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் வக்பு சட்டம். எப்.சி.ஆர்.ஏ. (FCRA) சட்டத் திருத்தம்.

டெல்லி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றாலும், இக்கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கும், நாட்டு நலனைப் பாதிக்கும் மக்கள் பிரச்சினைகளில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் திமுக தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து, திமுக ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவெடுத்திருப்பது தேசிய மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *