
சென்னை:
சென்னையில் பி.எம்.டபிள்யூ., கார் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் 100 மீட்டர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில், பாண்டி பஜார் பகுதியைச் பிரதீப் குமார் என்பவர் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். இவர் பிரபல தெலுங்கு செய்தி சேனலில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அது மட்டுமன்றி அவர், பகுதி நேர ரேபிடோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (நவ.,20) தாம்பரம் பைபாஸ் சாலையில், பிரதீப் குமார் பைக்கில் சென்றுள்ளார். அவர்மீது அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., கார் மோதியது.
இதனால் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார் ஓட்டுநரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். பிரதீப் குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


