Advertisements

நெல்லை :
நெல்லை அருகே சிறுவனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த சுமார் 10 பேர் கொண்ட மர்மகும்பல், திடீரென்று சிறுவனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, சிறுவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், பீர் பாட்டிலாலும் தாக்கி கொலை செய்ய முயன்றனர். பின்னர் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததையடுத்து, அந்த கும்பல் தப்பி சென்றது. இதில், பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை நடத்தினர்.

அதில், சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுவனை அரிவாளால் தாக்கிய சம்பவத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி நெல்லை எஸ்.பி. சிலம்பரசனிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Advertisements

