அரசியல் தலைவர்களுக்கு ராக்கி கட்டி பள்ளி மாணவர்களும் பெண்களும் வாழ்த்து.!

Advertisements

ரக்சா பந்தன் விழாவையொட்டிச் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களும் பெண்களும் அரசியல் தலைவர்களுக்கு ராக்கி கட்டிவிட்டு, நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

வட இந்தியாவில் சக ஆண்டின் சிராவண மாதத்தில் வரும் முழுநிலவு நாளில் ரக்சா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் நேற்றுப் பல இடங்களில் ரக்சா பந்தன் விழாக்கள் நடைபெற்றன. இன்றும் ரக்சா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. தில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்குத் தேசிய மாணவர் படையினர் ராக்கி கயிறு கட்டிவிட்டனர். இதேபோல் பிரம்ம குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்களும் ராக்கி கயிறு கட்டி, நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் மத்தியக் கனரகத் தொழில்துறை அமைச்சர் குமரசாமிக்குப் பெண்கள் ராக்கி கயிறு கட்டிவிட்டனர்.
கர்நாடகத்தின் உப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ரக்சா பந்தன் விழாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி கலந்துகொண்டார். அவருக்கு அங்கிருந்தோர் அவருக்கு ராக்கி கட்டிவிட்டனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இல்லத்தில் அவருக்குச் சிறுமியர் ராக்கி கயிறு கட்டிவிட்டனர். ரக்சா பந்தனையொட்டி அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ரக்சா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கிடையான அன்பு மட்டுமல்லாமல், மனிதர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள ஆழமான அன்பையும் மதிப்பையும் காட்டுவதாகத் தெரிவித்தார்.
லக்னோவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்குப் பள்ளிச் சிறுமியர் ராக்கி கயிறு கட்டிவிட்டு நெற்றியில் திலகமிட்டனர்.

லக்னோவில் உத்தரப் பிரதேசத் துணை முதலமைச்சர் பிரஜேஸ் பதக்குக்குப் பிரம்மகுமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் ராக்கிக் கயிறு கட்டிவிட்டனர். தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, நாடாளுமன்ற உறுப்பினர் சுதான்சு திரிவேதி ஆகியோருக்கு ராக்கி கயிறு கட்டிவிட்டுத் திலகமிட்டார். சண்டிகரில் அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனிக்குப் பள்ளி மாணவர்கள் ராக்கி கயிறு கட்டிவிட்டனர். பதிலுக்கு அவர் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தில்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்குச் சிறுமியர் ராக்கி கட்டிவிட்டனர். அவர்களுக்கு முதலமைச்சர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் பூங்காவில் உள்ள மரத்துக்கு முதலமைச்சர் சாம்ராட் சவுத்திரி ராக்கி கட்டிவிட்டார். பீகாரில் மரங்களைக் காப்பதற்கான விழாவாக ரக்சா பந்தன் கொண்டாடப்படுகிறது. குஜராத்தின் வதோதராவில் பள்ளிச் சிறுமியர் மரங்களுக்கு ராக்கிக் கயிறு கட்டிவிட்டனர்.

மனிதர்களுக்குப் பூக்கள், பழங்கள், தூய காற்று ஆகியவற்றைத் தருவதால் மரங்களுக்கு ராக்கி கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.ஜம்மு காஷ்மீரின் பனிகாலில் அங்குள்ள பெண்கள் இராணுவ வீரர்களுக்கு ராக்கி கட்டிவிட்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *