
நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமிநாராயணன் அதிரடியாக எச்சரித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது சகோதரரையும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரிய வில்சன் தரப்பு வக்கீல், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய நீதிபதி, நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என்று அதிரடியாக எச்சரித்தார். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாக சூட்டிகாட்டினார்.
அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா? எனக் கேள்வி எழுப்பினார். அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்றும் அவர் எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கும்படி மரிய வில்சன் தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்துள்ளார்.



