
புதுச்சேரியில் கடலில் குளித்த மாணவ, மாணவிகள் 4 பேர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகி உள்ளனர்.
புதுச்சேரி: புதொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகப் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறிக் கடலில் குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி இறப்பது தொடர்கதையாக உள்ளது.
இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு கடலில் இறங்கி குளிக்காதவாறு தடுப்பு கட்டைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனையும் மீறி நேற்று மதியம் புதுச்சேரி நெல்லித்தோப்பு டிஆர் நகரை சேர்ந்த சீனிவாசன் – மீனாட்சி தம்பதியினரின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மகள்கள் மோகனா (16), லேகா (14) ஆகியோர் பழைய துறைமுகப்பகுதியில் குளித்தனர். இவர்களது தாயார் மீனாட்சி கடற்கரையில் அமர்ந்திருந்தார்.
இதேபோல் கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும் நவீன் (16) மற்றும் அவரது நண்பர் கிஷோர் (16) ஆகியோரும் அதே பகுதியில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி நான்கு பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் உதவியுடன் மாயமான மாணவ – மாணவிகளைத் தேடி வருகின்றனர்.


