Pasupatheeswarar Temple: பக்தர்கள் பரவசம் பொங்க மாலை அணிவிப்பு!

Advertisements

கரூரில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 120 அடி உயர கோபுரத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கரூரில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் & தீபாதாரணை நடைபெற்றது.

ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு ராஜகோபுரத்திற்கு நீண்ட மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து இன்று புத்தாண்டை முன்னிட்டு ராஜகோபுரத்திற்கு 120 அடி உயர மலர் மாலை தயார் செய்து, கோவிலுக்கு எடுத்து வந்தனர். மலர் மாலைக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் தங்கள் கைகளிலும், தோள்களிலும் சுமந்து ராஜகோபுரத்தின் மீது, நீண்ட மலர் மாலையை ஏற்றினர்.

120 அடி உயர கோபுரத்திற்கு அதற்கு ஏற்றவாறு மாலை தயாரித்து, கோபுரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்ட பிறகு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

உயர்ந்து நிற்கும் கோபுரம்போல, தங்கள் வாழ்விலும் பல உயரங்களை எட்டிப் பிடிக்க இறைவன் துணை நீக்க வேண்டும் என மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.

இதே போல, கரூர் சின்னாண்டாங் கோயில் பகுதியில் அமைந்து அருள் பாலித்து வரும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தங்க காப்பு அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலேயே சுவாமிக்குப் பல்வேறு வாசனை திரவியத்தால் அபிஷேகம் நடத்தப்பட்டு, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட கற்பக விநாயகருக்கு தங்கக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

தங்கக்காப்பு செய்யப்பட்ட விநாயகரை தரிசிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குத் திரண்டனர்.

கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கடந்த காலங்களைப் போல அல்லாமல், நடப்பாண்டு நோய், நொடிகள் பாதிக்காத வகையில் நல்லதொரு ஆண்டாக அமைய வேண்டும் என மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.புத்தாண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *