Pudhucherry : திசைமாறும் அரசியல் களம்..பரபரப்பை கிளப்பும் தலைவர்கள்..!

Advertisements

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான பேச்சுவார்த்தையை முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி புறக்கணித்துள்ளதால் கூட்டணி உடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..இது குறித்த பின்னணி தகவல்களை தற்போது விரிவாக பார்க்கலாம்..

புதுச்சேரியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சி…..சுருக்கமாக,  சொல்ல வேண்டுமென்றால், என்.ஆர். காங்கிரஸ் இடம்பெற்றது. அதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஏனென்றால், கர்மவீரர் காமராஜரின் அரசியல் வாழ்வை மட்டுமல்லாமல், அவரைப் போலவே வாழ்க்கையும் அமைத்துக் கொண்ட புதுச்சேரி ரங்கசாமி, காமராஜரையே உயிருடன் கொளுத்த முயற்சித்த ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியல் பிரிவான பாஜகவுடன் கூட்டுச் சேருவதை புதுச்சேரி மக்களும் அவரது தொண்டர்களும் ரசிக்கவில்லை.

ஆனாலும் பாஜகவுடன் ரங்கசாமி கூட்டணி அமைத்தார்.  தமிழ்நாட்டில் பாஜகவின்  முக்கிய முகமாக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன் 2021 முதல் 24 வரை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த போது ரங்கசாமிக்கும் அவரது ஆட்சிக்கும் நிறைய குடைச்சல்களைக் கொடுத்தாலும் அதை ரங்கசாமி வெளிக்காட்டிக் கொள்ளாமல்  பொறுமை காட்டினார்.

அது அவரது அரசியல் முதிச்சியைக் காட்டியது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோது மோடியின் ஒன்றிய பாஜக அரசு பாண்டிச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாக இருந்தது.
ஆனால்.. அதை கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை ரங்கசாமிக்கு மட்டுமல்ல, பாண்டிச்சேரி மக்களிடத்திலும் காணப்படுகிறது.

அதுமட்டுமல்ல 2021 தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பாஜகவுடன் சேர்ந்து நடத்தப்படும் கூட்டணி ஆட்சியான பாண்டிச்சேரி அரசு மீது அம்மாநில மக்கள் வெறுப்படைந்திருப்பதாக ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது. இந்தச் சூழலில்தான் வரும் தேர்தலிலும் பாஜகவுடன் என்.ஆர். காங்கிரஸ் இணைந்து மீண்டும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது.

தேர்தல் தேதி  அறிவிப்புக்கு முன்னதாக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால் அந்தப்பேச்சு வார்த்தையை முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி புறக்கணித்து விட்டதால் அந்தக்   கூட்டணியில் பெரியளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அந்தப் பேச்சு வார்த்தையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை ரங்கசாமி மீண்டும் வலியுறுத்தியதோடு,  அதற்கான உறுதிமொழியை பாஜக தர வேண்டும் என்றும்  ரங்கசாமி அழுத்தம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இரு கட்சிகளின் தலைவர்களிடையே கடந்த வாரம் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், உடன்பாடு எட்டப்படாமல் போய்விட்டது. என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் மற்றொரு முக்கிய கோரிக்கை என்னவென்றால், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும், நடிகர் விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுன் ரெட்டியின் மைத்துனருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினால் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியை, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதாகும்.

இவற்றைத் தவிர இன்னும் சில கோரிக்கைகளை ரங்கசாமி முன்வைத்தாலும் இந்த இரண்டு தான் முக்கியமான கோரிக்கைகள் என்று சொல்கின்றனர். இந்த நிலையில், லட்சிய ஜனநாயகக் கட்சி சேர்க்காமல் இருக்க முடியாது என்று பாஜக அடித்துக் கூறிவிட்டதாகவும் அதனால் ரங்கசாமி மனக்கசப்பில் இருப்பதாகவும் சொல்றாங்க.

இதனால், புதுச்சேரி தனியார் விடுதியில் இன்று காலை நடைபெறவிருந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையை ரங்கசாமி கேன்சல் செய்துவிட்டார். சுமார் இரண்டு மணிநேரம்  தனியார் சொகுசு விடுதியில் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா  ஆத்திரத்துடன் வெளியேறியதாக சொல்றாங்க.

தனது கோரிக்கைகளுக்குப் பதில் சொல்ல பாஜகவுக்கு ரங்கசாமி 24 மணி நேரம் கெடு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.   பாண்டிச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல்-9ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அந்த மாநிலங்களில் அனைத்துக் கட்சியினரும் நேற்றிலிருந்தே வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிவிட்டனர்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்துடன்  என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை.. என்.ஆர். காங்கிரஸின் நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும்  பாஜக ஏற்காவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க என்.ஆர். காங்கிரஸ் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *