
நீட் மறுதேர்வில் மகாராஷ்டிரம் நாக்பூரைச் சேர்ந்த மாணவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தேர்வு மையத்தை ஒதுக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நீட் என்னும் பெயரில் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசியத் தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு மே மூன்றாம் நாள் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் வினாத்தாளைக் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்கள் தங்கள் மாணவர்களுக்கு முன்கூட்டி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டதால் பல இலட்சம் மாணவர்கள் எழுதிய அந்தத் தேர்வு ரத்துச் செய்யப்பட்டது.
வினாத்தாள் வெளியானது தொடர்பாகச் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் ஜூன் 21ஆம் நாள் நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அடுத்த ஆண்டு கணினி அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
நாளை இந்தியாவில் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெறும் நீட் மறுதேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முறை தில்லியில் இருந்து ஏற்கெனவே வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வங்கிப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
நாளை பிற்பகல் இரண்டு மணி முதல் மாலை ஐந்தேகால் மணி வரை நடைபெறும் தேர்வில் 22 இலட்சத்து 79 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வெழுதும் மாணவர்கள் முற்பகல் 11 மணியில் இருந்து பகல் ஒன்றரை மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும் என்றும், ஒன்றரை மணிக்குக் கதவுகள் மூடப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாக்பூரில் உள்ள மாணவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் உள்ள பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கடவுச்சீட்டு பெறாத தங்கள் மகன் எப்படி அங்குச் சென்று தேர்வெழுதுவது என்று வினவியுள்ள பெற்றோர் இது குறித்துத் தேசியத் தேர்வு முகமையை அணுகியுள்ளனர்.
இந்த மாணவர் நாக்பூரை முதன்மையான தேர்வு மையமாகவும், அதையடுத்து வார்தா பண்டாரா ஆகிய நகரங்களையும் குறிப்பிட்டுள்ள நிலையில் அவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.




