
மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலைத் திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ஆம் நாளும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ஆம் நாளும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன.
இந்நிலையில் அங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஒரேநாளில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2021ஆம் ஆண்டுத் தேர்தலில் நந்திக்கிராமத்தில் மம்தா பானர்ஜியைப் பாரதிய ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரி 1950 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதன்பின் மம்தா பானர்ஜி பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி இம்முறை நந்திக்கிராமம், பவானிப்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
பவானிப்பூரில் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் களமிறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.




