பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்னவென்று பார்க்கலாம்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தொழிலதிபர் பி.ஆர் சுந்தர். இவர் மீது தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். புகாரில், ’வேலைக்காக பி.ஆர்.சுந்தரிடம் கேட்டிருந்தேன்.
இதன் அடிப்படையில் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் பி.ஆர்.சுந்தர் அவரது வீட்டுக்கு வரவழைத்து அநாகரிகமாக நடந்து கொண்டார். இது குறித்து அவரது மனைவியிடம் சொன்ன போது அவர் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் மன்னிப்பு கேட்பதாக கூறி பி.ஆர் சுந்தர் அவரது அலுவலகத்திறகு வரவழைத்து ஒரு அறையில் பூட்டி வைத்து பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று தெரிவித்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார், பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் பி.ஆர். சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவரது மனைவி மங்கையர்கரசி மீதும் வழக்கு பதிவு செய்தனர். பெங்களூருவில் இருந்த பி.ஆர் சுந்தர் மற்றும் அவருடைய மனைவியை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை செய்தனர் . பின்னர், இருவரையும் சென்னை சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.
பி.ஆர். சுந்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடரப்பட்ட வழக்கு என்றும், காவல்துறை விசாரணைக்கு அனுப்பக்கூடாது என்ற வாதங்களை முன்வைத்தார். மேலும், பிஆர் சுந்தரின் மனைவிக்கு இந்த குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து, பிஆர் சுந்தர் மறும் அவரது மனைவியை காவல்துறை விசாரணைக்கு அனுப்ப முடியாது என மறுத்து ஜாமீனில் விடுவித்தது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம். இதையடுத்து நேற்று இரவே இருவரும் வீடு திரும்பினர்.
இதற்கிடையே பி.ஆர்.சுந்தர் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதில், ”சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் சொத்து, Mansun கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளேன். அந்த சொத்தில் தற்போது தமிழ்நாடு காவல்துறையில் காவல் கண்காணிப்பாளராக தொழில்நுட்ப சேவை பிரிவில் பணியாற்றி வரும் அன்புச் செழியன் வசித்து வருகிறார். சட்டபூர்வ அனுமதி இன்றி தங்கி வருகிறார். பலமுறை கேட்டும் சொத்தை காலி செய்து ஒப்படைக்க மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.ஆனால் இதுவரை இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாகத்தான் தன்னை குறிவைத்து திட்டமிட்டு இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.இந்த சூழலில் பி ஆர் சுந்தர் கைதுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காக பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.சுந்தர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் பழிவாங்கல் நோக்கோடு வழக்குத் தொடுத்து, கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நிர்வாக நடவடிக்கையாகும். தனிநபர் பகை தீர்க்க, மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முதல்வர் விஜய்யின் போக்கு வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
அரசையோ, அரசியல் இயக்கத்தையோ விமர்சித்துப் பேசுவதற்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை என்பது மிக மிக அடிப்படையான ஜனநாயக உரிமையாகும்.அந்த அடிப்படை உரிமையையே முற்றாக மறுக்கும் வகையில், அதிகாரத்தைக் கொண்டு வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான அதிகார முறைகேட்டினை கடுமையாக எதிர்க்கிறேன். எனவே, பி.ஆர்.சுந்தர் மீது உண்மைக்குப் புறம்பாகத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் வாபஸ் பெற வேண்டும் ” என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பி.ஆர். சுந்தர் கணித ஆசிரியராக இருந்தவர். பின்னர், பங்குச்சந்தை முதலீடு, டிரேடிங் துறையில் ஈடுபட்டார். முதலீட்டு ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். யூடியூப், சமூகவலைத் தளங்களில் வீடியோவும் வெளியிட்டு வந்தார். கோடிக்கணக்கில் அவருக்கு சொத்துகள், ஆடம்பர வீடுகள், கார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



