மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் அக்வான் தீவிரப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை நண்பகல் ஆந்திரத்தின் நரசாப்பூர், ஒடிசாவின் பூரி இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
தீவிரப் புயலான அக்வான் இன்று மேற்குமத்திய வங்கக் கடலில் நிலவியது. இது நரசாப்பூர், கலிங்கப்பட்டினம் ஆகியவற்றில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 440 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்குக் கிழக்கு வடகிழக்கில் 580 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியது. இது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
நாளை நண்பகலில் ஆந்திரத்தின் நரசாப்பூர், ஒடிசாவின் பூரி இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிரப் புயலின்போது கனமழை பெய்வதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆந்திரத்தின் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் நாட்டுப்படகுகளும் விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. புயல் வருவதையொட்டி முன்னெச்சரிக்கையாக ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தீயணைப்பு மீட்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.



