Wayanad landslides: பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு- 7 வது நாளாக மீட்பு பணி!

மேப்பாடியில் முகாம்களாகச் செயல்பாடும் 10 பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். இன்னும் 200 பேரைக் கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்பு பணிகள் இன்றும் நீடித்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 387-ஆக உயர்ந்துள்ளது. 7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்ற 206 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களைச் சேர்ந்த 2,597 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்துக் கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் ஒரு வாரமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேப்பாடியில் முகாம்களாகச் செயல்பாடும் 10 பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்குத் தன்னார்வலர்கள் உணவு சமைத்து தரத் தடை விதித்த நிலையில், அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. தன்னார்வர்லர்கள் தரப்பில் கொடுத்த உணவால் வீரர்களுக்குப் புட் பாய்சன் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *