
கடந்த 1989 ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் ஆல் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி 36 ஆண்டுகளுக்குப் பிறகு முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு சொந்தம் மாம்பழ சின்னம் யாருக்கு சொந்தம் என்று தந்தை மகனுக்கு இடையே நடைபெற்ற யுத்தத்தில் கடைசியில் மாம்பழச் சின்னமும் பாட்டாளி மக்கள் கட்சியும் முடக்கப்படும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்து விட்டதால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான் தான் தலைவர் என ராமதாஸ் அறிவித்தார்.
ஆனால் தேர்தல் ஆணையம் என்னைத்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அங்கீகரித்திருக்கிறது என அன்புமணி தெரிவித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் வருகிற 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்த பதவியில் நீடிக்கலாம் எனவும் அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அன்பு மணி தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்களை கொடுத்து அதன் அடிப்படையில் அவரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது என ராமதாஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதாவது , கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுக்குழு கூடி அன்புமணி தலைவராக தேர்ந்தெடுத்து இந்த வருடத்துடன் மூன்று வருடங்கள் முடிவடைந்து விட்டன . எனவே அன்புமணியின் பதவி காலம் முடிந்து விட்டது என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லியில் ராமதாஸ் தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுவல்லாமல் அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட தவறான ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தவறான முடிவு எடுத்திருக்கிறது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது அந்த வகையில் நீதிபதி மினி புஸ்கர்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் சின்னம் ஒதுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது.
தற்பொழுது இரு தரப்பும் பிரச்சினை க்குறியதாக இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் இரு தரப்பு கையெடுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது . எனவே பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி இருக்கிறது.
மருத்துவர் ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல் பீர் சிங் அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அன்புமணி 3 ஆண்டு காலம் மட்டுமே தலைவர் பதவியில் இருக்க முடியும் என்ற நிலையில் 2022 ஆம் ஆண்டு நடந்த பொதுக் குழுவை 2023 ஆம் ஆண்டு நடந்ததாக தவறான ஆவணங்களை தாக்கல் செய்து இருக்கிறார் . அன்புமணியின் பதவி காலம் 2025 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்து விட்டது. அதன் பிறகு கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .
சரியான ஆவணங்கள் அளித்தும் தேர்தல் ஆணையம் அவற்றை கருத்தில் கொள்ளாமல் தவறாக முடிவு எடுத்திருக்கிறது. இரு தனி நபர்கள் கட்சியை உரிமை கொண்டாடி வரும் போது தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று வாதிட்டார்.மேலும் பாமகவில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் அன்புமணி தான் அவர் இப்பொழுது தனது தந்தையையே வெளியேற்றி விட்டதாக ராமதாஸ் தரப்பில் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே அன்புமணி தரப்பில் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் மருத்துவர் ராமதாஸுக்கு 90 வயதாகிவிட்டது என வாதிட்டனர். இது குறித்து தற்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து இருக்கிறது. தேர்தல் ஆணையம் சார்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது, தேர்தலின் போது இரு தரப்பு பிரச்சினை இருந்தால் பாமகவின் மாம்பழச் சின்னம் முடக்கி வைக்கப்படும் . இந்த பிரச்சனையில் தேர்தல் ஆணையத்தை குறை கூறக்கூடாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருக்கிறது.
இந்த வழக்கில் நீதிபதி தனது முடிவை தெரிவிக்கும் பொழுது அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட்டு முடிவெடுக்க முடியாது என்றும் அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது என்றும் தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
தற்பொழுது மீண்டும் ராமதாஸ் தரப்பில் எங்களுக்கு தான் மாம்பழ சின்னம் என்றும் அன்புமணி தரப்பில் எங்களுக்குத் தான் மாம்பழ சின்னம் என்றும் பேசி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன்இருவரும் தேர்தல் சமயத்தில் இதுபோல் மோதிக்கொண்டால் மாம்பழ சின்னம் முடக்கப்படும் என தெரிவித்துள்ளது பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது.


