
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, கடந்த இரண்டு நாட்களாகத் தனக்குச் செல்பேசியில் இடைவிடாமல் அச்சுறுத்தும் அழைப்புகள் வந்துகொண்டே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே எக்ஸ் தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், கடந்த இரண்டு நாட்களாகத் தனது செல்பேசியில் இடைவிடாமல் மணி ஒலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை எடுத்தால் அச்சுறுத்தும் அழைப்புகளாக இருப்பதாகவும், தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்லூரிகள், பொது நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தான் தடுப்பதால் அதைக் கண்டித்து அச்சுறுத்தும் அழைப்புகள் வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியையும், அம்பேத்கரையும் விமர்சித்தவர்கள் தன்னை விமர்சிக்காமல் விட்டுவிடுவார்களா? என்றும் அவர் வினவியுள்ளார்.
அச்சுறுத்தியும், கிண்டல் பேசியும் தன்னை அமைதியாக்கி விடலாம் என்று அவர்கள் தவறாக நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு தொடக்கம்தான் என்றும், புத்தர், பசவண்ணர், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகள் அடிப்படையில் சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டிய நேரம் இது என்றும் பிரியங்க் கார்கே குறிப்பிட்டுள்ளார்.


