
பாகிஸ்தான் தனது எல்லையை முழுவதுமாக மூடிவிட்டதால், பாகிஸ்தான் தனது குடிமக்களை அட்டாரி-வாகா கடவையில் சிக்கித் தவிக்க விட்டுள்ளது.காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் உள்ளூர் குதிரையோட்டி ஒருவர் உட்பட 27 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் ராஜாங்க ரீதியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதில், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் ஒன்றாக இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் நமது நாட்டைவிட்டு, ஏப்ரல் 30ஆம் தேதியோடு வெளியேற வேண்டும் என்றும், அதன் பின் எல்லைப்பகுதியான வாகா – அட்டாரி கேட் மூடப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக, பாகிஸ்தான் நாட்டினர் முறையான ஆவணங்களுடன் இந்தியாவை விட்டு வெளியேற இந்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான அட்டாரி-வாகா எல்லை கடக்கும் இடத்தை பாகிஸ்தான் அரசு இன்று முற்றிலுமாக மூடியுள்ளது.



