இவ்வளவு துதி பாடத் தேவையில்லை – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் இடம் மாறியிருப்பதற்காக இவ்வளவு துதி பாட வேண்டும் என்ற தேவை இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் 3ஆவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது, தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏமாற்றின் வடிவமாக ஜொலிக்கும் பட்ஜெட் என்றும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைத் த.வெ.க. அரசு மறந்துவிட்டது என்றும் குற்றம் சாட்டினார். தி.மு.க. ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளதாக விமர்சித்தார்.

தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 5 ஆண்டுகளுக்குள் உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார். ஓ.பன்னீர்செல்வம் சொல்வதைப் போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது என்று குறிப்பிட்டார். ஓ.பன்னீர்செல்வம் இடம் மாறியிருப்பதற்காக இவ்வளவு துதி பாட வேண்டும் என்ற தேவை இல்லை என்று விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து  பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் இடத்தை மாற்றியபோதும் அவரின் இதயத்தின் அருகே வைத்துள்ள படத்தை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் விஜய் கூறியதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர் என்றும் படம் வைத்து ஏமாற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *