‘தமிழர் தந்தை’ என போற்றப்படும் சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நினைவுகூரப்பட்டு வருகிறது.
இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சாலையில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிலைக்கு அருகில் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், காளையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,
தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில், தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், இதழியல் துறைக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
இதழியல் துறையில் உயிரோட்டமான எளிய தமிழ்நடையை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதனும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சி.பா.ஆதித்தனார் அவர்கள். தமிழ்நாடு அரசின் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்த அவர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்தபோது, சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கும் நடைமுறையைக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட “தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் நம் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


