உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாராவில் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர்.
அவர்களை மீட்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பலனளிக்காத நிலையில் சுரங்கத்தில் மேலிருந்து தோண்டும் பணி தொடங்கியுள்ளது. தொழிலாளர்களை மீட்க மேலிருந்து 86 மீட்டர் தூரம்வரை துளையிட வேண்டிய நிலையில், இதுவரை 19 மீட்டர் தூரம் துளையிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலிருந்து துளையிடும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீட்பு பணிமுடிய எப்படியும் சுமார் 100 மணி நேரத்திற்கு மேல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 22 வயதான தொழிலாளி மஞ்சித், தனது தந்தையிடம் வாக்கி டாக்கி மூலம் பேசியுள்ளார்.
அப்போது தன்னுடன் உள்ள அனைத்து தொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் யாருக்கும் மருத்துவ அவசர நிலை எதுவும் தேவையில்லை எனவும் அந்தத் தொழிலாளி தனது தந்தையிடம் தெரிவித்திருப்பது நாட்டு மக்கள் அனைவரையும் நிம்மதியடையச் செய்வதாக உள்ளது.16 நாட்களை எட்டியுள்ளது மீட்பு பணி. உடைந்த பாகங்களை நீக்கிவிட்டு பணி தொடரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


