
எந்தவொரு அரசியல் கட்சியும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் புகைப்படத்தையோ, திரைப்பட வசனங்களையோ பயன்படுத்தக் கூடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். வேலூரில் தேமுதிகவின் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, மக்கள் சந்திப்பு முடிந்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்க , திமுக மறுப்பக்கம் நீங்கள் கேட்ட குறிப்பிட்ட சீட்களை தருகிறோம் கூட்டணிக்கு வாருங்கள் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் சந்திப்பின்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம், தவெக மாநாடு தேதி மாற்றம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதி மாற்றம் குறித்து காவல்துறையிடமும், விஜய்யிடமும் தான் கேட்க வேண்டும். எங்கள் தரப்பில் இருந்து எந்த அழுத்தமோ, கோரிக்கையோ வைக்கப்படவில்லை.
பத்திரிகையாளர்களாகிய நீங்களும் எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். எப்போதும் கூட்டணி குறித்து மட்டும் கேட்காதீர்கள்; மக்கள் பிரச்சினைகள் குறித்து கேளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் கேப்டனின் படத்தை எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்பதை இங்கு அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன். எந்தக் கட்சியும் கேப்டனின் புகைப்படத்தைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கூடாது. கூட்டணிக்கு வரும்போது வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
இது சினிமாவிற்குப் பொருந்தாது. சினிமாவில் கேப்டனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கேப்டன் எங்கள் குடும்பச் சொத்து அல்ல, சினிமாத் துறையின், மக்களின் சொத்து என்பதால், திரைத்துறைக்கு இது பொருந்தாது. அரசியல் கட்சி என்று வரும்போது குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக இதைத் தெரிவித்துள்ளேன்” என்றார்.



