இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக இரு தேர்தல் ஆணையர்களும் மத்திய கேபினட் செயலாளருக்கு கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தின் பின்னணியில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியது. மேலும், பதவி விலகுவதற்காக 48 மணி நேர காலக்கெடுவையும் அக்கட்சி விதித்திருந்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால், நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ஆப்ஜித் தீப்கே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சி அறிவித்த 48 மணி நேர கெடு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டம் தொடங்கப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக மும்பையில் போராட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்களுக்கு இடையிலானதாக கூறப்படும் கருத்து வேறுபாடுகள், பதவி விலகக் கோரி விதிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம் ஆகியவை அரசியல் மற்றும் தேர்தல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.




