
நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் என்று கோரித் தமிழ்நாடு சட்டபேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டபேரவைக் கூட்டத்தொடரில் தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக நடைபெற்றது. இதில், மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வைத் திரும்ப பெற்று மாநிலப் பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஒரு மாணவர் 12 ஆண்டாகப் பள்ளியில் கற்ற கல்வியை விட ஒரு நாள் நடக்கும் தேர்வு மூலம் அவரது திறமையை மதிப்பிடக் கூடாது என்று தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்ட முன்வடிவைச் சட்டமன்றப் பேரவை நிறைவேற்றியிருந்தும், குடியரசுத் தலைவரால் அச்சட்ட முன்வடிவுக்கு ஏற்பிசைவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தொடர் வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகளால் இந்த ஆண்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இலட்சக்கணக்கான மாணவர்களுக்குச் சொல்லொணாத் துயரமும், இளம் மாணவர்கள் உயிரிழப்பும் ஏற்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இத்தேர்வு முறை முற்றிலும் இழந்துள்ளதாகக் கூறினார். மேலும், நீட் தேர்வானது வரம்பின்றி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார். எனவே, இத்தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நீட் தேர்வுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, நீட் நுழைவுத் தேர்வு முறையை ஒழிக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உள்ளிட்ட பிற மையச் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதாகத் தெரிவித்தார். இதன்மூலம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துத் திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேசினர். அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



