நாளை மதுரை செல்கிறார் முதல்வர் விஜய் – ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்!

தமிழக முதல்-அமைச்சர் விஜய், நாளை (திங்கட்கிழமை) முதன்முறையாக மதுரை செல்கிறார். அங்கு த.வெ.க.வின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் விஜய், காலை 11.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தை சென்றடைகிறார். பின்னர் கார் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து, மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லும் முதல்வர் விஜய், அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை அரசு மருத்துவமனையில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனை கட்டிடங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திலும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் முதல்வர் விஜய் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள நிலையில், முதல்வர் விஜயின் மீனாட்சி அம்மன் கோவில் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதல்வர் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு சுற்றுலா மாளிகை முதல் அரசு மருத்துவமனை மற்றும் காந்தி அருங்காட்சியகம் செல்லும் முக்கிய சாலைகளில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட தொடக்க விழா மற்றும் காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் பார்வையிடும் நிகழ்ச்சி ஆகியவை மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *