
பாரிஸ்-இல் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கச் சென்றிருக்கும் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டியணைத்து வரவேற்றார்.
இதன்பிறகு நடந்த இரவு விருந்தில் பிரான்ஸ்-இல் உள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.
பிரான்ஸ்-இல் அதிபர் மேக்ரானை சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “எனது நண்பர் அதிபர் மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி பாரிசில் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் உரையாடுகிறார்” என்று தெரிவித்துள்ளது.
இரு நாடுகள் சுற்றுப் பயணமாக முதலில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்துபேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
பாரிசில் AI உச்சி மாநாட்டிற்கு இணை தலைமை தாங்கும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.
பிறகு வணிகத் தலைவர்களுடன் உரையாற்ற உள்ளார்.
