
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரிந்து வரும் 71 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாத காலமாகச் சம்பளம் வழங்காததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளுக்கும் ஒப்பந்த தூய்மை பணியாளராக 71 பேர் பணியாற்றி வருகின்றனர்,
மேலும் நகராட்சியில் ஒப்பந்தத்தின் மூலம் சென்னையைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஹெல்த் கேர் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துப் பணி செய்து வருகிறது,
இதைனையடுத்து இந்த நிறுவனம் நரசிங்கபுரம் நகராட்சியில் பணியாற்றும் 71 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்குப் பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையிலும் தொடர்ந்து இரண்டு மாத காலமாகச் சம்பளம் வழங்காததால் இன்று காலைப் பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்குச் செல்லாமல்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், எங்கள் வாழ்வாதாரமே இந்தச் சம்பளத்தை நம்பி வாழ்வதாகவும் இதனால் வீட்டு வாடகை மளிகை சாமான்கள் குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும், தற்போது பொங்கல் வருவதால் எங்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் மேலும் பொங்கல் பண்டிகை என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தற்போது சம்பளத்தை வங்கியின் மூலம் வழங்கினால் எங்களால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால் நகராட்சி ஆணையாளர் எங்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனாலே எங்களுக்குச் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது எனக் கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகராட்சி ஆணையாளர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இந்த முற்றுகை போராட்டத்தால் நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியில் காலை முதலே தூய்மை பணிகள் மேற்கொள்ளாமல் குப்பைகள் தேங்கி வருகின்றன.மேலும் இதைதமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் தூய்மை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

